உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது

குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக வடகிழக்கு டெல்லியில் நடந்துவரும் போராட்டங்களின்போது ஏற்பட்ட வன்முறைகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.


குரு தேஜ் பகதூர் மருத்துவமனை அலுவலர்கள், திங்கள்கிழமை முதல் 13 மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக கூறியதை மேற்கோள்காட்டி ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் ட்வீட் செய்துள்ளது.


இந்த வன்முறைகளில் 150 பேர் காயமடைந்துள்ளனர். இந்த போராட்டங்களுக்குப் பிறகு டெல்லியின் சாந்த் பாக், பஜன்புரா, பிரிஜ்புரி, கோகுல்புரி மற்றும் ஜாஃப்ராபாத் ஆகிய பகுதிகளில் பதற்றச் சூழல் காணப்படுகிறது.


ஜாஃபராபாத் பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுவந்தவர்கள் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளனர். "ஜாஃபராபாத் சாலை கிளியர் செய்யப்பட்டுள்ளதாகவும், வட கிழக்கு டெல்லியில் கண்டதும் சுட உத்தரவு ஏதும் பிறப்பிக்கப்படவில்லை என்றும் டெல்லி போலீஸ் தெரிவித்துள்ளது" என்கிறது ஏ.என்.ஐ. செய்தி முகமை.