கோட்டையில் ஆட்டம் கண்ட பாஜக; மண்ணைக் கவ்விய நிதின், பட்நாவிஸ்

மகாராஷ்டிர மாநிலத்தின் ஆறு ஜில்லா பஞ்சாயத்துகளுக்கு நடைபெற்ற தேர்தல் முடிவுகள் கடந்த செவ்வாய் கிழமை அன்று அறிவிக்கப்பட்டது. அம்மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் - சிவசேனா கூட்டணி ஆட்சி அமைத்த பிறகு நடைபெற்ற முதல் தேர்தல் என்பதால் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. இதில் தற்போது ஆட்சியில் இருக்கும் ”மகா விகாஸ் அகாதி” கூட்டணி 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.


பிரகாஷ் அம்பேத்கர் தலைமையிலான வஞ்சித் பகுஜன் அகாதி கட்சியானது ஒரேவொரு இடத்தில்(அகோலா) வென்றுள்ளது. மற்றொரு இடமான துலேவை காங்கிரஸிடம் இருந்து பாஜக கைப்பற்றியுள்ளது. நான்கில் மூன்று ஜில்லா பஞ்சாயத்துகளில் மகா விகாஸ் அகாதி கூட்டணி வென்றிருக்கிறது. அதில் நாக்பூர், பால்கார், வாஷிம் ஆகியவை பாஜகவின் வசம் இருந்தது.

 

மற்றொரு இடமான நந்துர்பார் காங்கிரஸிடம் இருந்தது. இருப்பினும் பாஜக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மொத்தமுள்ள 332 இடங்களில் பாஜக 103 இடங்களில் வெற்றி பெற்று எழுச்சி கண்டுள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு தேர்தலில் 74 இடங்களில் மட்டுமே வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கடுத்து காங்கிரஸ் 73, தேசியவாத காங்கிரஸ் 46 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. சிவசேனாவை பொறுத்தவரை 36 இடங்களில் இருந்து 46ஆக வெற்றி அதிகரித்துள்ளது. ஆனால் காங்கிரஸை பொறுத்தவரை 100ல் இருந்து 73ஆக வெற்றி சரிந்துள்ளது.